பஞ்சாப் விவசாயிகள் பேரணி எதிரொலி: டெல்லி முக்கிய சாலையில் கான்கிரீட் தடுப்புகள் அமைப்பு!!

விவசாயிகள் பேரணியை தடுக்க அம்பாலா சாலையில் போலீசார் கான்கிரீட் தடுப்புகள் அமைத்துள்ளனர்.

Update: 2024-12-06 06:55 GMT

concrete barricades

சம்யுக்தா கிசான் மோட்சா மற்றும் மஸ்தூர் கிசான் மோட்சா விவசாய சங்கம் தலைமையில் பஞ்சாப் விவசாயிகள் ஷம்பு பகுதியிலிருந்து பாராளுமன்றம் நோக்கி 'டெல்லி சலோ' பேரணி செல்ல உள்ளனர். பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை உறுதிசெய்யவும், மின்சார மானியம் வழங்கவும், விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவும், லக்கிம்பூரில் கடந்த ஆண்டு விவசாயிகள் மீது நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு நியாயம் வழங்க வலியுறுத்தியும் ஜத்தா பகுதி பஞ்சாப் விவசாயிகள் பாராளுமன்றம் நோக்கி இன்று மதியம் 1 மணிக்கு பேரணி செல்ல உள்ளனர். இதற்காக இன்று காலை முதல் திரண்டு வருகின்றனர். இதனால் டெல்லியில் கடுமையான நெரிசல் ஏற்படும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கருதி போலீசார் விவசாயிகளை டெல்லி எல்லையிலேயே தடுத்து நிறுத்த திட்டமிட்டுள்ளனர். டெல்லியில் பாதுகாப்பை போலீசார் அதிகப்படுத்தி உள்ளனர். முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் பேரணியை தடுக்க அம்பாலா சாலையில் போலீசார் கான்கிரீட் தடுப்புகள் அமைத்துள்ளனர். விவசாயிகள் திரண்டு வருவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். ஹரியானா மாவட்ட போலீசாரும் இப்பேரணிக்கு அனுமதி வழங்காத நிலையில் விவசாயிகள் பேரணி செல்ல இருப்பதால், அசம்பாவிதம் நிகழ்வதை தடுக்க ஹரியானா எல்லை பகுதியான ஷம்பு பகுதியில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். டெல்லிக்கு வரும் விவசாயிகளை அங்கேயே தடுத்து நிறுத்த போலீசார் வியூகங்கள் வகுத்து வருகின்றனர். விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லி நோக்கி செல்வதில் தங்களுக்கு சிக்கல் இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளது. 100 விவசாயிகள் கொண்ட குழு டெல்லியை நோக்கி அமைதியான முறையில் செல்ல உள்ளது. தடுப்புகளை உடைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. டெல்லி நோக்கி சென்று அமைதியான போராட்டம் நடத்த அரசு அனுமதிக்கும் என்று நம்புகிறோம். விவசாயிகள் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு பேச விரும்பினால் மத்திய அரசின் கடிதத்தையோ அல்லது ஹரியானா, பஞ்சாப் முதலமைச்சர் அலுவலகத்தையோ காட்டுங்கள்... நாங்கள் வருகிறோம் என்று விவசாயிகள் சங்க தலைவர் சர்வான்சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News