மும்பைக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்; போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!!
மும்பைக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக மத்திய ஏஜென்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக மத்திய ஏஜென்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மும்பையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய வழிபாட்டு தலங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மார்க்கெட் பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மதவழி பாட்டு தலங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் ரோந்து அணிவகுப்பில் ஈடுபட்டனர். இதேபோல் ரெயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவிகள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்திய பின்னரே பயணிகளை ரெயில் நிலையத்துக்குள் அனுமதித்தனர். பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள அந்தந்த மண்டலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்துமாறு துணை போலீஸ் கமிஷனர்கள் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். 2 பிரபலமான வழிபாட்டு தலங்கள் உள்ள குரோபோர்ட் பகுதியில் போலீசார் நேற்று அணிவகுப்பு ஊர்வலமாக சென்றனர். முக்கிய சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதையும், அணிவகுப்பு மற்றும் ரோந்து கண்காணிப்பையும் பார்வையிட்ட மும்பை பொதுமக்கள் பதட்டமான சூழ்நிலையில் உள்ளனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இது பண்டிகை காலத்தையொட்டி நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகை என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மாதம் 10 நாள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடிய மும்பை இப்போது துர்கா பூஜை, தசரா மற்றும் தீபாவளிக்கு தயாராகி வருகிறது. நவம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பயங்கரவாத அச்சுறுத்தல் மும்பையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.