திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பின் பிரதமர் டெல்லி புறப்பட்டார்
3 நாள் தியானம் நிறைவு
Update: 2024-06-01 10:55 GMT
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தியானம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக, அங்கிருந்து ஹெலிகாப்டரில் 30-ம் தேதி மாலை வருகை தந்தார். அன்று குமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனி படகில் விவேகானந்தர் பாறைக்கு சென்ற அவர் அங்குள்ள தியான மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார். 31-ம் தேதி அதிகாலையில் காவி உடைகளை அணிந்து கொண்ட பிரதமர் மோடி சூரிய வழிபாடு நடத்தி விட்டு கையில் ருத்ராட்ச மாலை என முற்றும் துறந்த துறவி கோலத்திலேயே தியானம் மேற்கொண்டார். இன்று (சனிக்கிழமை) 3-வது நாளாக பிரதமர் மோடி தனது தியானத்தை பிற்பகல் வரையில் தியானம் மேற்கொண்டார். அதன் பிறகு தியானத்தை முடித்துக் கொண்டு சுமார் 2. 45 மணியளவில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியான மண்டபத்தில் இருந்து பிரதமர் மோடி வெளியே வந்தார். வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணிந்து பிரதமர் வந்திருந்தார். தொடர்ந்து விவேகானந்தன் பெயர் கொண்ட படகில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இருந்து படகில் கிளம்பிய மோடி திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். அங்கு 133 அடி திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பின் திருவள்ளுவர் சிலை மண்டபத்துக்குள் நுழைந்தார். பின்னர் திருவள்ளுவர் சிலை பாதத்தை தொட்டு வணங்கி, மலர் தூவி மரியாதை செலுத்தி, பாதங்களளில் மாலை வைத்து வணங்கினார். இதையடுத்து திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கண்ணாடி கூண்டு பாலம் பணியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். சரியாக மாலை 3. 55 மணியளவில் மூன்று நாள் தியான நிகழ்ச்சி முடிந்து பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டார்.