வயநாடு சம்பவம் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு!
வயநாடு நிலச்சரிவை இயற்கை பேரிடராக அறிவித்து கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டி உள்ளது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வயநாடு நிலச்சரிவை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேரள முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் மக்களவையில் இன்று பேசிய காங்கிரஸ் எம் பி யும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, சில நாட்களுக்கு முன்னதாக நானும், எனது சகோதரி பிரியங்காவும் வயநாட்டிற்கு சென்று அங்குள்ள மோசமான நிலைமையை எங்கள் கண்களால் பார்த்தோம் என்று தெரிவித்துள்ளார்.
கொள்கைகளை தள்ளிவைத்துவிட்டு அனைவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டது ஆறுதலான விஷயம் என்று குறிப்பிட்ட அவர், வயநாடு நிலச்சரிவை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் பாதிப்புகள், இழப்பீடுகளை சரி செய்ய மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை எதிர்பார்க்கிறோம் என்றும் வலியுறுத்தி உள்ளார்.