Lok Sabha polls 2024: பாஜகவை வீழ்த்த மாஸ்டர் பிளான் - தேசிய வார் ரூம் தலைவராக சசிகாந்த் செந்தில் நியமனம்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த தேசிய அளவில் 5 பேர் கொண்ட வார் ரூம் கமிட்டியை காங்கிரஸ் அமைத்துள்ளது.

Update: 2024-01-07 06:20 GMT

Lok Sabha elections

Lok Sabha polls 2024: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த தேசிய அளவில் 5 பேர் கொண்ட வார் ரூம் கமிட்டியை காங்கிரஸ் அமைத்துள்ள நிலையில், அதன் தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்து வரும் காங்கிரஸ் கட்சி, அனைத்து மாநில எதிர்கட்சிகளையும் திரட்டி INDIA என்ற கூட்டணியை அமைத்தது. நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் INDIA கூட்டணி மூலம் பாஜகவை வீழ்த்தும் நடவடிக்கையில் எதிர்கட்சிகள் தொடங்கியுள்ளன. இதற்கிடையே, நடந்துமுடிந்த ஐந்து மாநில தேர்தல்களிலும், இதற்கு முன்னதாக நடந்த வடமாநில தேர்தல்களிலும் கோட்டை விட்ட காங்கிரஸ் கட்சி அடுத்ததாக தனது பலத்தை நிரூபிக்க முனைப்போடு செயல்பட்டு வருகிறது. 

அதனால், நாடாளுமன்ற தேர்தலை கணிக்கவும், தேர்தல் வியூகங்கள் வகுக்கவும், பாஜகவை எதிர்கொள்ளவும் என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கவும் அகில இந்திய அளவில் 5 பேர் கொண்ட வார் ரூம் கமிட்டியை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. 5 உறுப்பினர்கள் பங்கேற்கும் வார் ரூம் கமிட்டியின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர், தென் மாநிலங்களான கர்நாடகா மற்றும் தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்களின் போது காங்கிரஸ் வார் ரூம் தலைவராக செயல்பட்டார். அதனால், நடந்து முடிந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மாபெறும் வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்தது. துடிப்புள்ள நபராக பார்க்கப்படும் சசிகாந்த் செந்தில், கர்நாடக தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு வியூகங்களை வகுத்து கொடுத்ததுடன், பிரச்சார யுக்திகள், தேர்தல் வாக்குறுதிகள், செயல்படுத்த உள்ள திட்டங்கள் என ஒவ்வொன்றையும் மக்களை கவரும்படி செய்தார். இதனால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற பெரும் தலைவர்கள் வந்து பிரச்சாரம் செய்த போதிலும் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றமுடியாமல் கோட்டைவிட்டது பாஜக. 

பாஜக பலம் வாய்ந்ததாக இருந்ததாலும் அக்கட்சியை வெற்றிப்பெற விடாமல் தடுத்தது சசிகாந்த் செந்திலும் வியூகம் என்பது காங்கிரஸ் கட்சியால் மறுக்க முடியாத உண்மை. இதேபோல் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது தேர்தல் வார் ரூம் தலைவராக இருந்த சசிகாந்த் செந்திலின் வியூகங்களே வெற்றிப்பெற்றன. 

இந்த இரு வெற்றிகள் மூலம் தன் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை காங்கிரஸ் கட்சிக்கு சசிகாந்த் செந்தில் கொடுத்துள்ளார். இதனால் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகங்களை வழிநடத்தும் பொறுப்பு சசிகாந்த் செந்திலிம் வந்துள்ளது. இந்த முறை பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சிறப்பான பங்களிப்பை செலுத்தி வருகிறது காங்கிரஸ் தலைமை. 

அதன் ஒரு பகுதியாக தான், காங்கிரஸ் கட்சியின் தேசிய வார் ரூம் தலைவராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் இணைந்து கோபால் பூட்டைல், வருண் சந்தோஷ், கேப்டன் அரவிந்த் குமார் ஆகியோர் தேசிய வார் ரூம் குழுவில் இடம்பெற்றுள்ளனர். மாநில தேர்தல்களில் தன்னை நிரூபித்த சசிகாந்த் செந்தில், தேசிய தேர்தலில் மேலும் சிறப்பாக செயல்படுவதுடன், தேர்தல் அறிக்கை, திட்டங்கள், வியூகங்கள் என அனைத்தும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வித்யாசமாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தற்போது தேர்தல் வார் ரூம் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு செந்தில் கள ஆய்வு செய்துள்ளார். அதற்காக ஒரு பெரிய குழுவையும் அமைத்துள்ளார். அந்த குழுவில் துடிப்பான இளைஞர்கள் இடம்பெற்றதுடன், தீவிர கள ஆய்வு மேற்கொண்டு தேர்தல் அறிக்கையும் தயாரித்துள்ளனர். 

யார் இந்த சசிகாந்த் செந்தில் ?

தமிழகத்தை சேர்ந்த சசிகாந்த் செந்தில் மாவட்ட ஆட்சியராக கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வந்துள்ளார். 2019ம் ஆண்டு தனது பணியை ராஜினாமா செய்த இவர், தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைதள பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்தார். 

கர்நாடக தேர்தலின் போது தேர்தல் பொறுப்பாளாராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், முன்னாள் பாஜக தலைவருமான அண்ணாமலையை கட்சி தலைமை அனுப்பியது. அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது கர்நாடகாவில் பணிபுரிந்துள்ளார். அவருக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் அனுப்பப்பட்டார். இருவருக்குமான போட்டியில் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது. 

Tags:    

Similar News