துணை சபாநாயகர் பதவி வழங்கினால் மட்டுமே ஆதரவு - ராகுல் காந்தி!
துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கினால், ஆளுங்கட்சி நிறுத்தும் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிக்க தயாராக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்படுகிறார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓம் பிர்லா சபாநாயகர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தரத் தயார். ஆனால், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும். வேட்பாளர் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகளுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.
அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது. சபாநாயகர் பதவிக்கு ஆதரவு தர வேண்டும் என கார்கேவிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டார். ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சி நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க தயார். ஆனால், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கு தரப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம்.
இது குறித்து மீண்டும் தொடர்பு கொள்வதாக கார்கேவிடம் ராஜ்நாத் சிங் கூறினார். ஆனால், இதுவரை அழைக்கவில்லை. எதிர்க்கட்சிகளிடம் மோடி ஒத்துழைப்பு கேட்கிறார். ஆனால், எங்கள் தலைவர் அவமானப்படுத்தப்படுகிறார். இவ்வாறு ராகுல் கூறினார்.