ஒரேஒரு தீர்ப்பில் சாட்டையடி கொடுத்த உச்சநீதிமன்றம் - விழிப்பிதுங்கிய பாஜக!

தேர்தல் பத்திர பதிவு சட்டத்தின் பின்னணியில் இருக்கும் லாபிகள்!

Update: 2024-02-15 08:01 GMT

Supreme court order, eletoral bond scheme

எந்தவித அடையாளமும் குறிப்பிடாமல் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் தேர்தல் பத்திர நடைமுறை சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று மிக முக்கியமான மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை காக்கும் விதமாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதாவது, கடந்த 2018ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கும் தேர்தல் பத்திர நடைமுறை சட்டம் சட்டவிரோதமானது என்றும், அது ஆர்டிஐ சட்டத்திற்கு எதிரானது என்றும், மக்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகவும் வாக்களிக்கும் உரிமையை பறிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்த தீர்ப்பு பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் தேர்தல் பத்திர நடைமுறை சட்டம் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது. பொதுவாக அரசியல் கட்சிகள் நிதியுதவிகளின் அடிப்படையில் செயல்படும். தேர்தல் நேரங்களில் ஏற்படும் செலவுகளை சமாளிக்க அரசியல் கட்சிகளுக்கு வெளியில் இருந்து நிதி கிடைக்கலாம். தானாக அளிக்கப்படும் நிதிகள் தேர்தல் பத்திர பதிவு சட்டம் மூலம் கொடுக்கலாம் என்ற சட்டம் 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 

உதாரணமாக ஒருவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு நிதி அளிக்க விரும்பினால், தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கலாம். இந்த உறுதிமொழிப் பத்திரரத்தை எந்த ஒரு இந்திய குடிமகனும், அல்லது நிறுவனமோ பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு பெறப்படும் தேர்தல் பத்திரத்தில் தாங்கள் விரும்பும் கட்சிக்கு தன்னை பற்றிய எந்தவித அடையாளத்தையும் தெரிய படுத்தாமல் நன்கொடை அளிக்கலாம். 

இந்த சட்டம் 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2018ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது. KYC விவரங்கள் உள்ள வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எந்த ஒரு நபரும் தேர்தல் பத்திரத்தை வாங்கி நன்கொடை அளிக்கலாம். அந்த பத்திரத்தில் பணம் கொடுப்போரின் பெயர் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் பத்திரத்தை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம்.  

உதாரணமாக ஆயிரம் ரூபாய்க்கு ஒருவர் தேர்தல் பத்திரத்தை வாங்கினால் அதை 15 நாட்களுக்குள் பயன்படுத்தி குறிப்பிட்ட அவர் விரும்பும் கட்சிக்கு பணமாக மாற்ற வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும். இந்த தேர்தல் பத்திரங்கள் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர்  மாதங்களில் 10 நாட்களுக்கு  வழங்கப்படும். லோக்சபா தேர்தல் நடக்கக்கூடிய ஆண்டில் கூடுதலாக 30 நாட்களுக்கும் தேர்தல் பத்திரம் வெளியிடப்படலாம்.

இப்படி எந்தஒரு அடையாளமும் இல்லாமல் வழங்கப்படும் தேர்தல் பத்திரங்களுக்கு கருப்பு பணம் பயன்படுத்தப்படுவதாகவும், அரசியல் கட்சிகளின் நன்கொடையில் வெளிப்படை தன்மை இல்லை என்றும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் மறுமுகமாக தேர்தலில் தலையிடுவதை இந்த திட்டம் ஊக்குவிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. 

இந்த தேர்தல் பத்திரம் முறையை எதிர்த்து 2018ம் ஆண்டு இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் uச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேர்தல் பத்திரத்தில் நன்கொடையாளரின் பெயர் மறைக்கப்படுவது அரசியலமைப்பின் 19(1)(a)பிரிவின் கீழ் ஒரு குடிமகனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக குறிப்பிட்டிருந்தது. மேலும், சர்வதேச அளவில் லாபி செய்பவர்களுக்கு தங்களது சொந்த நோக்கத்தை இந்திய அரசியலிலும் ஜனநாயகத்திலும் திணிக்க தேர்தல் பத்திரம் முறையில் வாய்ப்பு இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த சூழலில் தான், தேர்தல் பத்திரமுறை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளது. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், தேர்தல் நிதி பத்திர நன்கொடை திட்டம் தகவல் அறியும் உரிமைக்கும், கருத்துரிமைக்கும் எதிரானது என்றும், பெயர் குறிப்பிடாத தேர்தல் பத்திரங்கள் ஆர்டிஐ சட்டத்திற்கு எதிரானது என்றும், தேர்தல் பத்திரங்கள் கருப்பு பணத்தை ஒழிக்கும் என்பதற்கான விளக்கங்கள் இல்லை என்றும்,  தேர்தல் பத்திரங்கள் வாக்காளர்கள் அது உரிமையை பறிக்கிறது என்றும், தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது என்றும் 5 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். மேலும், தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுத்த வேண்டும் என்ற நீதிபதிகள், இதுவரை பெறப்பட்ட தேர்தல் நிதி பத்திர விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். 

இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த கட்சி அதிக லாபம் பார்த்துள்ளது என்று பார்க்கையில், பாஜக முன்னிலையில் உள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் இருந்து 2022ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளில் ஏழு தேசிய கட்சிகளுக்கு மொத்தமாக ரூ.9,1888 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளன. அதில், பாஜகவுக்கு மட்டும் தோராயமாக ரூ.5272 கோடி  கிடைத்ததாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ரூ.952 கோடியும், திரிணாமூல் காங்கிரஸ்க்கு ரூ.767 கோடியும், கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

2019-20 ஆம் ஆண்டில்  அதாவது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது, தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்சமாக ரூ.3,439 கோடி நன்கொடையாக கிடைத்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.  இதேபோல், 2021-22 ஆம் ஆண்டில் நடந்த 11 சட்டமன்றத் தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளுக்கு  தேர்தல் பத்திரங்கள் மூலம் சுமார் 2,664 கோடி ரூபாய் நன்கொடை கொடுக்கப்பட்டுள்ளன. 

இந்த அளவுக்கு கோடிகளில் நன்கொடையை வாரி கொட்டும் தேர்தல் பத்திரம் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது அரசியல் கட்சிகளுக்கு சாட்டையடியாய் பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News