நாடு முழுவதும் காங்கிரஸ் பாதயாத்திரை நடத்த திட்டம்!!
நாடு தழுவிய அளவில் பிரசார பாதயாத்திரை நடத்த காங்கிரஸ் முடிவு செய்யப்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கர்நாடக மாநிலம் பெல்காமில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விவாதித்தனர். அப்போது, பெல்காமில் 1924-ம் ஆண்டு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தான் காந்தியடிகள் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வலிமையான அவரது தலைமையின் கீழ் நாடு சுதந்திரம் பெற்றது. அதன்பிறகு காங்கிரஸ் தலைமையில் நாடு மிகப் பெரிய வளர்ச்சி அடைந்தது. எனவே காந்தியின் கொள்கைகளை நிலை நிறுத்தவும், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும் நாடு தழுவிய அளவில் பிரசார பாதயாத்திரை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இந்த பிரசார பாதயாத்திரையை குடியரசு தினமான அடுத்த மாதம் (ஜனவரி) 26-ந்தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாதயாத்திரைக்கான திட்டங்கள் விரைவில் வகுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கொண்டு வந்தார். அதை கூட்டத்தில் ஏற்றுக்கொண்டனர். மேலும் தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. சட்டமேதை டாக்டர் அம்பேத்கரை மத்திய மந்திரி அமித்ஷா விமர்சித்ததற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.