தேர்தல் விதிகளில் திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு!!
தேர்தல் விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும்போது ஏற்படும் சிக்கல்களை, சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் இருக்கும் சி.சி.வி.டி., வெப் கேமரா போன்றவற்றை சம்பந்தப்பட்டவர்கள் பெற்று பரிசோதிக்க முடியும். இதற்கு மத்திய சட்ட அமைச்சகம் தேர்தல் நடத்தை விதி 93 (2) (a)-ன் படி தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும் என்ற விதி நடைமுறையில் இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, விதி 93 (2) (a) கீழ், 'தேர்தல் தொடர்பாக இந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்' என திருத்தம் செய்து மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சட்டப்பிரிவில் குறிப்பிட்டுள்ள 'காகித ஆவணங்களை மட்டுமே புகார்தாரர்கள் பார்க்கமுடியும்' என அதிகாரிகள் தெளிவுபடுத்துகின்றனர். இதன் அடிப்படையில், வேட்புமனு படிவம், தேர்தல் முகவர்கள் நியமனம், முடிவுகள் மற்றும் தேர்தல் கணக்கு அறிக்கைகள் போன்றவை மட்டுமே பொதுமக்களால் பார்க்கமுடியும். சி.சி.டி.வி. உள்ளிட்ட மின்னணு ஆவணங்கள் எதுவும் தனியாக அதில் குறிப்பிடப்படவில்லை. எனவே மின்னணு ஆவணங்கள் பொது ஆய்வுக்கு இனி கிடைக்காது. இதன்மூலம் வாக்குச்சாவடி மைய சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை யாரும் எளிதில் பார்வையிட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளும் சூழல் தடுக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை நீர்த்துப்போகச் செய்யும் செயல் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தேர்தல் விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அவசர கதியில் தன்னிச்சையாக, யாருடனும் ஆலோசிக்காமல் முக்கியமான சட்டதிருத்தத்தை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. தேர்தல் நடைமுறையின் நேர்மை வேகமாக அழிந்து வருகிறது. இதனை சுப்ரீம் கோர்ட் மீட்டெடுக்க உதவும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.