அரசுக்கு அரசியல் அதிகாரம் இருக்கலாம், ஆனால் மக்களின் குரலை பிரதிபலிப்பது எதிர்க்கட்சிகள் தான் - ராகுல் காந்தி!
எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குவதன் மூலம் அவையை திறம்பட நடத்தலாம் என்ற யோசனை ஜனநாயகமற்றது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவை சபாநாயராக தேர்வான ஓம்பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.
“இரண்டாவது முறையாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் மற்றும் இண்டியா கூட்டணி சார்பில் எனது வாழ்த்துக்கள். இந்த அவை இந்திய மக்களின் குரலைப் பிரதிபலிக்கிறது. அந்தக் குரலின் இறுதி நடுவர் நீங்கள். அரசுக்கு அரசியல் அதிகாரம் இருக்கலாம், ஆனால் மக்களின் குரலை பிரதிபலிப்பது எதிர்க்கட்சிகள் தான். கடந்த முறை இருந்ததை விட இந்திய மக்களின் குரலை இம்முறை எதிர்க்கட்சிகள் அதிகமாகவே பிரதிபலிக்கின்றன.மக்களின் குரலை பிரதிபலிக்க எதிர்க்கட்சிகளை அனுமதித்து, அரசியலமைப்பைக் காக்கும் கடமையைச் செய்வீர்கள் என நம்புகிறேன். நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்துழைப்பது மிகவும் முக்கியம். அதேபோல, இந்த அவையில் எதிர்க்கட்சிகளின் குரலும், பிரதிநிதித்துவமும் மிகவும் முக்கியமானது.” என்று தெரிவித்தார்.