அடுத்த ஆண்டு முதல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கியூட் தேர்வில் மாற்றம்!!
அடுத்த ஆண்டு முதல், கியூட் இளநிலை, முதுநிலை தேர்வுகளில் நிறைய மாற்றங்கள் செய்வது என முடிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (கியூட் யு.ஜி.), (கியூட்-பி.ஜி.) நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு அத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் தேர்விலேயே தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டன. இந்த ஆண்டு, டெல்லியில் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேர்வுக்கு முந்தைய நாள் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, 'கியூட்' இளநிலை, முதுநிலை தேர்வுகள் நடத்தப்படுவதை மறுஆய்வு செய்வதற்காக பல்கலைக்கழக மானிய குழு ஒரு நிபுணர் குழுவை அமைத்திருந்தது. அக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில், தேர்வில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து பேசிய பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) தலைவர் ஜெகதீஷ் குமார், முந்தைய ஆண்டுகளில் பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பான, உகந்த சூழ்நிலையை உருவாக்கும் நோக்கத்தில் தேர்வு நடைமுறையை மேம்படுத்துவது அவசியம். அதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு, தேர்வின் பல்வேறு அம்சங்கள், அதாவது, தேர்வு கட்டமைப்பு, தேர்வு தாள்கள் எண்ணிக்கை, தேர்வு தாள்களின் நேரம், பாடத்திட்டம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தது. அதைத்தொடர்ந்து நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளை சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக மானிய குழு கூட்டத்தில் பரிசீலித்தோம். அதில், அடுத்த ஆண்டு முதல், 'கியூட்' இளநிலை, முதுநிலை தேர்வுகளில் நிறைய மாற்றங்கள் செய்வது என முடிவு செய்துள்ளோம். திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் அடங்கிய வரைவு திட்டத்தை விரைவில் வெளியிடுவோம். அதுதொடர்பாக மாணவர்கள், பெற்றோர், கல்வி நிறுவனங்கள் ஆகியோர் தங்கள் கருத்துகளையும், யோசனைகளையும் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.