வயநாடு நிலச்சரிவு: ராகுல்- பிரியங்கா நேரில் ஆய்வு!
வயநாடு அருகே மேப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறிவருகிறார். நிலச்சரிவில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலையை உடனடியாக அறிந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள வசதியாக மாநில அமைச்சர்கள் பலரை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் பினராய் விஜயன் அனுப்பி வைத்துள்ளார். மேலும், நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அமைச்சர்கள் கூட்டத்தையும் நேற்று நடத்தினார்.
வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு பாதித்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று கேரள வருவதாக இருந்தது. ஆனால் வயநாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அவர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது
இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மீட்புக் குழுவினரிடம் மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.