புஷ்பா 2 படத்தின் சிறப்புக்காட்சி; கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு
புஷ்பா 2 பட வெளியிட்டு திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனால் நேற்று தொடங்கிய டிக்கெட் முன்பதிவில் ரூ.100 கோடி வசூலாகி புதிய சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் உருவான 'புஷ்பா 2' படம், பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என 6 மொழிகளில் இன்று வெளியானது. இந்த நிலையில், 'புஷ்பா 2' பட வெளியிட்டு திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு 'புஷ்பா 2' சிறப்பு காட்சியை பார்க்க நேற்று நடிகர் அல்லு அர்ஜூன் வந்தார். இதனால் ஏராளனமான ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கணவர், இரு குழந்தைகளுடன் படம் பார்க்க வந்திருந்த ரேவதி என்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மேலும் கூட்டநெரிசலில் மயக்கமடைந்த ரேவதியின் மகன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.