அரசு பள்ளியில் மாநில அளவிலான பள்ளி மாணவியர் பூப்பந்து போட்டியில் மதுரை முதலிடம்

குமாரபாளையம் அரசு பள்ளியில் மாநில அளவிலான பள்ளி மாணவியர் பூப்பந்து போட்டியில் மதுரை முதலிடம்

Update: 2024-07-22 10:50 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான பள்ளி மாணவியர் இரண்டு நாட்கள் பூப்பந்து போட்டி நேற்றுமுன்தினம் துவங்கியது. பள்ளியின் தலைமையாசிரியை (பொ) சாரதா, ஒருங்கிணைப்பாளர் அப்பாதுரை தலைமை வகித்தனர். தேசிய சாம்பியனும், மாநில பூப்பந்து கழக இணைச் செயலருமான விஜய் பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் சென்னை, கடலூர், தஞ்சை, நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை, புதுக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 25 அணியினர் பங்கேற்றனர். நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டிகள் நடந்தன. இதில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம் பகுதிகளை சேர்ந்த நடுவர்கள் ராஜா, அர்த்தரசு, அசோகன், பரணி, தீபக் பங்கேற்றனர். இதில் மதுரை ஒ.சி.பி.எம். அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், இளம்பிள்ளை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், சென்னை, ஜெர்சி மோசஸ் அணியினர் மூன்றாமிடமும், கரூர், ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நான்காம் இடமும், குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஐந்தாமிடமும் பெற்று சாதனை படைத்தனர். தொழிலதிபர் சந்திரசேகரன் பங்கேற்று வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ்கள், கோப்பைகள், கேடயங்கள் வழங்கி வாழ்த்தினார். உடற்பயிற்சி ஆசிரியர்கள் சந்திரன், ரவி, மாணிக்கம், என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News