உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் தமிழ்ப்புதல்வன் திட்டம்!
உயர்கல்வியை ஊக்கப்படுத்துவதற்காகத்தான் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் "தமிழ்ப்புதல்வன் திட்டம்" செயல்படுத்தப்படவுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்..
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000ஃ- உதவித்தொகை வழங்கும் "தமிழ்ப்புதல்வன் திட்டம்" வருகின்ற ஆகஸ்ட் 9ம் தேதி செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் 2024-2025 கல்வியாண்டு முதல், தமிழகத்தில் அரசு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று உயர்கல்வியில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் அனைத்து மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் இத்திட்டம் துவங்கப்படவுள்ளது. மேலும் இதில் பயன்பெற தகுதியுடைய அனைத்து மாணவர்களும் கல்லூரி தொடர்பு அலுவலர்கள் மூலம் விண்ணப்பித்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கி கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக புதிய வங்கி கணக்கு தொடங்கிடவும், ஆதார் எண் இணைப்பதற்காகவும் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, இன்று தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு அவர்களுக்கு இத்திட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்ததாவது: தமிழ்நாடு அரசு, அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தினை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற உங்களுக்கு வங்கி கணக்கு இருக்க வேண்டும். அதேபோல் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இத்திட்டத்தில் உங்களுக்கு ஒரு டெபிட் கார்டு வழங்குவார்கள். மாணவர்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்துவதற்காகத்தான் இத்திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. எனவே நீங்கள் இத்திட்டத்தில் ரூ.1000 பெறுவதுடன் நன்றாக படித்து முன்னேற வேண்டும். இத்தொகையினை அத்யாவசிய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் கூடுதலாக தகுதிகளை வளர்த்துக்கொண்டால் அந்த தகுதிகளின் அடிப்படையில் வேலைவாய்ப்பு எளிதாக கிடைக்கும். எனவே நான் முதல்வன் திட்டத்தில் ஆளுமைத்திறன், ஆங்கிலம் பயிற்சி போன்ற கூடுதல் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் தொழில் நிறுவனங்களுக்கு பயிற்சிக்கு சென்றால் வெளி உலகில் உள்ள வாய்ப்புகள் உங்களுக்கு தெரியும். நீங்கள் வேலை தேடுவதைவிட வேலை கொடுப்பவர்கள் உங்களை தேடி வரும் வகையில் உங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 9ஆம் தேதி தமிழ் புதல்வன் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார். அடுத்த மாதத்தில் இருந்து உங்களது வங்கி கணக்கில் மாதம்தோறும் ரூ.1000 வரவு வைக்கப்படும். நீங்கள் அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதிதெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் மற்றும் வங்கியாளர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள், அரசு பாலிடெக்னிக் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்...