குப்பைகளை முறையாக தரம் பிரித்து உரம் தயாரிக்கும் மையத்துக்கு கொடுக்க வேண்டும்
பணியாளர்களுக்கு ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் உத்தரவு
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் சுகாதார பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் பேசியதாவது:- வீடுகள், தெருக்கள் மற்றும் குப்பை கொட்டும் இடங்கள் போன்றவற்றில் சேகரிக்கப்படும் குப்பைகளை பணியாளர்கள் முறையாக மக்கும் மற்றும் மக்காத என தரம் பிரிக்க வேண்டும். பின்னர் தரம் பிரிக்கப்படும் குப்பைகளை உரம் தயாரிக்கும் மையங்களுக்கு கொடுக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவன பணியாளர்கள் இந்த பணிகளை முறையாக செய்ய வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் உரங்கள் தேவைப்படுவர்களுக்கு வழங்க வேண்டும். இந்த மையங்களை செயற்பொறியாளர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். இங்கு தயாரிக்கப்படும் உரத்தை மாடித்தோட்டம், விவசாயம் செய்பவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கால்வாய்களில் கழிவு நீர் தேங்காத வகையில் தூய்மை பணிகளை பணியாளர்கள் முறையாக மேற்கொள்ள வேண்டும். இதில் துணை ஆணையாளர் அசோக்குமார், மாநகர நல அலுவலர் மோகன், உதவி ஆணையாளர்கள் சுரேஷ்குமார், வேடியப்பன், லட்சுமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.