தேசிய நூலகர் தின கொண்டாட்டம்
குமாரபாளையத்தில் தேசிய நூலகர் தினம் கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கிளை நூலகம் மற்றும் விடியல் ஆரம்பம் சார்பாக தேசிய நூலகர் தினம் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய ரங்கநாதனின் பிறந்தநாளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ல் இந்தியாவில் தேசிய நூலக தினம் கொண்டாடப்படுகிறது. மூத்த வாசகர் குழந்தைசாமி பேசியதாவது: புத்தகத்தை தலை குனிந்து படித்தால், நம் வாழ்வில் தலை நிமிர்ந்து வாழலாம். பள்ளி மாணவ, மாணவியர் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை அதிகம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பல நல்ல நூல்களை கற்று அறிவதால், பள்ளிக்கல்வி தவிர உலக அறிவையும் பெற முடியும். யாருக்காவது அன்பளிப்பு கொடுக்கும் போது கூட புத்தகங்களை கொடுத்து பழகுங்கள். அவர்களும் படிக்கும் வழக்கத்திற்கு வந்து விடுவார்கள் இவ்வாறு அவர் பேசினார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் வைக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசாக புத்தகங்களை பஞ்சாலை சண்முகம் மற்றும் தீனா வழங்கினர்.