அடையாளம் தெரியாத வாகனம் மோதி குதிரை படுகாயம் சாலையில் திரியும் குதிரைகளால் விபத்து அபாயம்
குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி குதிரை படுகாயமடைந்தது. சாலையில் திரியும் குதிரைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை, டீச்சர்ஸ் காலனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சிறிய குதிரை ஒன்று அடிபட்டு கிடந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கால்நடைத்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், கால்நடை டாக்டர் செந்தில்குமார் நேரில் வந்து முதலுதவி சிகிச்சை வழங்கினார். இது போல் நகரின் பல பகுதிகளில் குதிரைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதுடன் விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இந்த குதிரைகளின் உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து வழக்கறிஞர் தங்கவேல் கூறியதாவது: பிரதான சாலைகளில் குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இவைகளால் பல விபத்துக்கள் ஏற்பட்டு, அப்பாவி பொதுமக்கள் படுகாயமடைந்து வருகிறார்கள். இதற்கு காரணமான உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.