மாலத்தீவுக்கு தோணி போக்குவரத்து தொடங்கியது.
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு தோணி போக்குவரத்து நேற்று தொடங்கியது.
தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு காய்கறிகள், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அதுபோல் இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருட்கள், பழைய காகிதங்கள் கொண்டு வரப்படுகின்றன. பொதுவாக தோணி போக்குவரத்து கடல் சீதோஷன நிலையை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது. அதாவது, மே மாதம் 1-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி வரை கடலில் கடினமான கால நிலை காணப்படுவதால் தோணி இயக்கப்படுவது கிடையாது. செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை சுமுகமான காலநிலை நிலவுவதால் தோணி போக்குவரத்து நடைபெறும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் கடலில் கொந்தளிப்பு அதிகமாக காணப்பட்டதால் தோணி போக்குவரத்து ஒரு மாதம் தாமதமாக தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த 1-ந் தேதி முதல் தோணி போக்குவரத்து தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் மாலத்தீவில் உள்ள மாலி துறைமுக அதிகாரிகள், தூத்துக்குடி தோணி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதில் தோணியில் சரக்கு இறக்குமதிக்கு சலுகைகளை வழங்கி உள்ளனர். தற்போது சுமுகமான காலநிலையால் கடந்த 1-ந் தேதி மாலத்தீவுக்கு புறப்படும் தோணியில் காய்கறிகள், மண், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், எந்திர தளவாடங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றப்பட்டன. அந்த சரக்குகளுடன் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு முதல் தோணி நேற்று புறப்பட்டது. இதனை தொடர்ந்து மற்றொரு தோணியில் சரக்கு ஏற்றும் பணியும் நடந்து வருகிறது. ஒரு தோணியில் சுமார் 250 முதல் 300 டன் வரை சரக்குகளை ஏற்றமுடியும் என்று கூறப்படுகிறது. இதேபோன்று இலங்கைக்கும் சுமுகமான காலநிலை நிலவும் காலங்களில் மட்டுமே தோணி இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்துக்கு கடல் வாணிப துறை அனுமதி வழங்கி உள்ளது. விரைவில் இதற்கான உத்தரவு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இலங்கைக்கும் விரைவில் போக்குவரத்து தொடங்க உள்ளதாக தோணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.