கடனை செலுத்திய பின்னரும் தங்க நகைகளை வழங்க மறுத்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் மூன்று லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் -நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நகை கடன்களை வழங்கும் போது வாடிக்கையாளருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வேறு கடன்கள் நிலுவையில் இருந்தால் நகை கடனை திருப்பி செலுத்தினாலும் நகைகள் திரும்ப வழங்கப்படாது என்ற நிபந்தனை உள்ளதா?

Update: 2024-10-24 03:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் நகரில் மோகனூர் சாலையில் உள்ள ராக்கி நகரில் வசிக்கும் கந்தசாமி மகன் செந்தில் முருகன் (44), கந்தசாமி மனைவி செல்வி (61), சுப்பராயன் மகன் குமரேசன் (41) ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடனை செலுத்திய பின்னரும் அடமானம் வைத்த நகைகளை தர மறுத்த வங்கி சேவை குறைபாடு புரிந்துள்ளதாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018 ஜூலை மாதத்தில்,நாமக்கல்லில் மோகனூர் சாலையில் உள்ள கனரா வங்கியில் 236 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ 4,94,000/- ஐ செந்தில் முருகன் கடனாக பெற்றுள்ளார். இதைப்போலவே, 76 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ 1,00,000/- ஐ செல்வியும் 269 கிராம் நகைகளை அடமானம் வைத்து ரூ 16,30,000/-ஐ குமரேசனும் கடனாக பெற்றுள்ளார்கள்.மூவரும் கடனையும் வட்டியையும் கடந்த 2018 செப்டம்பர் மாதத்தில் வங்கியில் செலுத்தியுள்ளனர்.மூவருக்கும் வங்கியில் வேறு கடன்கள் இருப்பதை கூறி நகை கடன் தொகையை செலுத்திய பின்பு மூவருக்கும் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை வழங்க வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூவரும் தனித்தனியாக கடந்த ஜனவரி மாதத்தில் வங்கியின் மீது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.மூவரும் பெற்ற வேறு கடன்கள் வாரா கடன்களாக உள்ளதால் அவற்றை செலுத்தினால் மட்டுமே அடமானம் வைத்த நகைகளை திரும்ப வழங்க முடியும் என்று வங்கியின் தரப்பில் வாதிடப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர்கள் ஆர்.ரமோலா,என்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.நகை கடன்களை வழங்கும் போது வாடிக்கையாளருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வேறு கடன்கள் நிலுவையில் இருந்தால் நகை கடனை திருப்பி செலுத்தினாலும் நகைகள் திரும்ப வழங்கப்படாது என்ற நிபந்தனை உள்ளதா? என்பதை அறிய கடன் ஒப்பந்தத்தின் நகல்களை வங்கி தாக்கல் செய்யவில்லை என்றும் கடன் தொகை முழுவதும் செலுத்திய பின்னரும் அடமானம் வைத்த நகைகளை நுகர்வோர்களுக்கு வழங்காதது சேவை குறைபாடாகும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால்,வழக்கு தாக்கல் செய்தவர்கள் அடமானம் வைத்த நகைகளை 30 நாட்களுக்குள் வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என்றும் வழக்கு தாக்கல் செய்துள்ள ஒவ்வொரு நுகர்வோருக்கும் தலா ஒரு லட்சத்தை இழப்பீடாக கடனை திருப்பி செலுத்திய நாளிலிருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை ஆண்டு ஒன்றுக்கு ஒன்பது சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

Similar News