அரிய வகை கடல் ஆமை கரை ஒதுங்கியது!

தூத்துக்குடியில் 100 கிலோ அரிய வகை கடல் ஆமை கரை ஒதுங்கியது

Update: 2024-11-11 07:38 GMT
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் 100 கிலோ எடையுள்ள அரிய வகை ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை ஆமை இனங்கள் உயிர் வாழ்கின்றன. அவை கடற்கரை பகுதிகளில் குஞ்சு பொரித்து வாழ்ந்து வருகின்றன. ஆமையை மீனவர்கள் உணவுக்காக பிடிக்கவோ, வேட்டையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அழிந்து வரும் ஆமை இனங்களை பாதுகாக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் அரிய வகை ஆமை இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கிய ஆமை சுமார் 3 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. அதன் முகத்தில் கண்கள் இல்லாமல், வாய் மற்றும் இறக்கை பகுதிகள் சேதம் அடைந்து அழுகிய நிலையில் காணப்பட்டது. கடற்கரையில் இறந்து ஒதுங்கி கிடந்த ஆமையை கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள் இளைஞர்கள் பார்த்தனர். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆமை எவ்வாறு இறந்தது? யாரேனும் ஆமையை வேட்டையாடி கொன்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆமையை அந்த பகுதியிலேயே உடற்கூறாய்வு செய்து புதைக்கவும் ஏற்பாடு செய்தனர்.

Similar News