நாமக்கல்: தேசிய தொல்குடியினர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்பணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தேசிய தொல்குடியினர் தினம் 2024 ஐ முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

Update: 2024-11-15 16:40 GMT
நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி, அரசு பழங்குடியினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், இன்று மாவட்ட ஆட்சியர் , சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி முன்னிலையில், தேசிய தொல்குடியினர் தினம் 2024 –ஐ முன்னிட்டு மரக்கன்றுள் நடும் பணியை தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் ஆதார் அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்கள் வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன. வருகின்ற 16.11.2024 முதல் 24.11.2024 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. நாளை 16.11.2024 (சனிக்கிழமை) முள்ளுக்குறிச்சி, பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளி, 18.11.2024 (திங்கட்கிழமை) அன்று செங்கரை அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி, 19.11.2024 (செவ்வாய்கிழமை) அன்று வாழவந்திநாடு அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி, 20.11.2024 (புதன்கிழமை) அன்று பள்ளிகாட்டுபட்டி அரசு பழங்குடியினர் நல தொடக்கப்பள்ளி, 21.11.2024 (வியாழக்கிழமை) அன்று மேழூர் அரசு பழங்குடியினர் நல தொடக்கப்பள்ளி, 22.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று முள்ளுக்குறிச்சி பழங்குடியினர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாம்களில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றம், பெயர் மாற்றம், கூடுதல் மின் பளு மாற்றம் தொடர்பான மனுக்களையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சேவைகளான, பட்டா மாறுதல், உட்பிரிவு, நில அளவீடு (அத்தகாண்பித்தல்), வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ், உதவித்தொகை தொடர்பான மனுக்களையும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், வீட்டுவரி, குடிநீர் இணைப்பு, கட்டுமான வரைபட ஒப்புதல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சேவைகளான மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, தனிப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பராமரிப்பு மானியம், கருவிகள்/ உபகரணங்கள் உள்ளிட்ட சேவைகள், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை, வீட்டுமனை, இணையவழிப்பட்டா, தாட்கோ கடனுதவி, தொழிலாளர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் பல்வேறு சேவைகள், கூட்டுறவுத்துறை சார்பில் கடனுதவி, குடும்ப அட்டை பெயர் மாற்றம், முகவரி மாற்றம், சுகாதரத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, வேளாண்மை துறை சார்பில் பி.எம்.கிஸான் அட்டைகள், பழங்குடியினர் நலத்துறை சார்பில் நல வாரிய அட்டைகள், கிணறு வெட்டுதல், கறவை மாடு, ஆடு வளர்ப்பு திட்டங்கள், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் புதிய வங்கி கணக்கு தொடங்குதல், வனத்துறை சார்பில் வன உரிமைச்சான்று மற்றும் இ-சேவை மையம் சார்பில் பல்வேறு அரசு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. எனவே, இச்சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முள்ளுக்குறிச்சி பழங்குடியினர் நல மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவின் தரம், மாணவர்களுக்கான அறை வசதி, குடிநீர், கழிப்பிட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு மதிய உணவினை மாவட்ட ஆட்சியர் பறிமாறினார். மேலும், நாமகிரிப்பேட்டையில் சார் பதிவாளர் அலுவலகம் கட்டும் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசுவாமி, முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன், பழங்குடியினர் திட்ட அலுவலர் தே.பீட்டர் ஞானராஜ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News