மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாவட்ட ஆட்சியர் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.இப்பேரணியானது நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி நகர பேருந்து நிலையம், மணிகூண்டு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வழியாக சென்று மோகனூர் சாலை தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வந்தடைந்தது. இப்பேரணியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்கள், காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் என மொத்தம் 400-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்திவாறு சுமார் 3 கி.மீ தொலைவிற்கு பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில், குழந்தைகள் தின உறுதிமொழியை ”நான் பாதுகாப்பான குழந்தைப் பருவத்திற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான குழந்தைநேய செயல்பாடுகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்.குழந்தைத் திருமணம், இளம்வயது கர்ப்பம், பாலியல் வன்முறை, பள்ளி இடைநின்றல், போதைப்பொருள் பயன்பாடு, குழந்தைத் தொழிலாளர், சமூக ஊடகங்கள் தாக்கம், பாலின வேறுபாடு மற்றும் வேறு எந்தவித குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் என் கவனத்திற்கு வந்தாலும் உடனடியாக அக்குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபட்டு, குழந்தைகள் உதவி எண் 1098, 181 மற்றும் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுப்பேன். சாதி, மதம், இன வேறுபாடு இன்றி அனைத்து குழந்தைகளையும் சமத்துவமாக நடத்துவேன். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்பதை உணர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுவேன் என்று மனதார உறுதியளிக்கிறேன்” அனைவரும் ஏற்று கொண்டனர்.இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செ.சதீஷ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) . வே.கற்பகம் உட்பட கல்லூரி மாணவ, மாணவியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், காவல்துறையினர், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.