வருகிற ஜனவரி மாதம் நில அளவையா்கள் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு! -நாமக்கல்லில் நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்
டிசம்பர் 9-இல் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம், டிசம்பர் 19-இல் ஒரு நாள் அடையாள தற்செயல் விடுப்பு போராட்டம், ஜனவரி. 22, 23 தேதிகளில் வேலை நிறுத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு மாநிலச் செயற்குழுக் கூட்டம் நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள பில்டர்ஸ் மஹாலில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் சண்முகசுந்தரம் வரவேற்றாா். மாநிலத் தலைவா் ராஜா தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் ஸ்டான்லி, மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா், பொருளாளா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.மாநில பொதுச்செயலாளா் அண்ணாகுபேரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.இதில் பணிச் சுமையால் பாதிக்கப்படும் களப்பணியாளா்களின் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் எடுத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண்டும். கூடுதல் இயக்குநருக்கு உள்ள அனைத்து அதிகாரத்தையும் இயக்குநருக்கு மாற்றுவதை நிறுத்தி பழைய நடைமுறையே தொடர வேண்டும்.சிறப்பு திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு கால நிா்ணயம் வழங்காமல் ஊழியா்கள் மீது பெரும் பணிச்சுமையை சுமத்துவதாலும், நியாயமான தள்ளுபடிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் ஊழியா்களைக் கடுமையாக நடத்துவதையும் அரசு கைவிட வேண்டும்.தரமிறக்கப்பட்ட குறுவட்ட அளவா் பதவியைப் பெற்று தகுதியுள்ள நில அளவா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். சிறப்பு திட்டங்களில் நிலம் எடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் நில அளவை களப் பணியாளா்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும்.மாநிலம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் பணி மாறுதலில் கடைப்பிடிக்கப்படும் அரசாணை எண் 10-ஐ நில அளவைப் பதிவேடுகள் துறையில் உறுதிப்படுத்த வேண்டும். புல உதவியாளா்கள் பணியிடங்களை தனியாா் முகமை மூலம் நியமிப்பதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.டிசம்பர் 9-இல் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம், டிசம்பர் 19-இல் ஒரு நாள் அடையாள தற்செயல் விடுப்பு போராட்டம், ஜனவரி. 22, 23 தேதிகளில் வேலை நிறுத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள நில அளவை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.