தமிழ்நாட்டில் தாய் சேய் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களை விட குறைவாகவே உள்ளது!- மகப்பேறு மருத்துவர் சங்கத்தின் தலைவர் சந்திரா பொன்னுசாமி தகவல் !
மகளிர் நலன், தாய் சேய் நலம் சார்ந்த ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை வழங்குவதில் மகளிர் மருத்துவர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் சந்திரா பொன்னுசாமி தலைமையில் இந்திய மருத்துவர் சங்க முன்னாள் தலைவர் டாக்டர் குழந்தைவேலு முன்னிலையில் மகப்பேறு மருத்துவர்கள் நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்கள். நாமக்கல் மாவட்ட மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் சங்கத் தலைவர் சந்திரா பொன்னுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது..... டாக்டர் தொழில் என்பது மனித குலத்திற்கு மிகவும் மகத்தான சேவை செய்யும் தொழிலாகும். குறிப்பாக மகப்பேறு மருத்துவர்கள் ஒரு சிசுவை உலகிற்கு கொண்டுவருவதற்காக தாயையும், கருவையும் சுமார் 10 மாதங்கள் தீவிரமாக கண்காணித்து, பிரசவம் முடியும் வரையில், தங்கள் சொந்த வேலைகளையும் மறந்து கர்ப்பிணி தாய்க்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மகளிர் நலன், தாய் சேய் நலம் சார்ந்த ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை வழங்குவதில் மகளிர் மருத்துவர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பிற மாநிலங்களைவிட பிரசவத்தின்போது தாய்-சேய் இறப்பு குறைந்து காணப்படுகிறது.இந்தநிலையில், பிரசவத்தின்போது தாய்-சேய் இறப்பு சம்பவம் நடந்துவிட்டால் அதனை மருத்துவர்கள் மீது காரணம் காட்டி அவர்களை பொறுப்பாக்குவது முறையல்ல. அதேபோல பிரசவத்தின்போது, மருத்துவமனைகளை பல்வேறு நவீன வசதிகளின் அடிப்படையில் தரம் குறித்து அதன் அடிப்படையில் இறப்புக்கான காரணம் கண்டறிவது தவிர்க்கப்பட வேண்டும்.பிரசவத்தின்போது சுகப்பிரசவம் ஏற்படுவதை மகளிர் மருத்துவர்கள் உறுதி செய்து வருகின்றனர். பல்வேறு மன உளைச்சல் மற்றும் சவால்களுக்கிடையில் சுகப்பிரசவங்களை ஏற்படுத்தி தருவதில் மகளிர் மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அப்போது ஏற்படும் இறப்பு சம்பவங்களின் தொடர்ச்சியாக, மகளிர் மருத்துவர்கள் அச்சப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதனால் மகளிர் மருத்துவர்கள் இந்த துறையை விட்டு வேறு மருத்துவ பணிக்கு செல்கின்றனர்.பிரசவத்தின்போது தாய்- சேய் இறப்பு ஏற்பட்டால், முதற்கட்ட ஆய்வு நடக்கும் போது இந்த துறை சார்ந்த வல்லுநரின் அறிவுரையை பெற்ற பிறகே, உயர் அதிகாரிகளுக்கு மருத்துவ அறிக்கையை பரிந்துரை செய்யலாம். இரவு நேர பிரசவம் என்பது மகளிர் மருத்துவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அப்போது இறப்பு சம்பவம் நடந்தால் மருத்துவ அறிக்கை, மருத்துவர்களின் பதில் ஆகியவற்றை, பிரசவம் நடந்த பெண்ணின் உறவினர்கள் ஒரு சிலர் கிழித்து எறியும் சம்பவமும் நடக்கிறது. இதனால் பெண் மருத்துவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. கருவுற்ற பெண்களுக்கு, தற்போது உள்ள காலகட்டத்தில் வயது, எடை ஆகியவை அதிகரித்து வருவதால் பிரசவத்தின்போது சிக்கல் ஏற்படுகிறது. அப்போது, தாய்-சேய் இறப்பு விகிதத்தை பெருமளவில் குறைக்கவே மகளிர் மருத்துவர்கள் உயர் முன்னுரிமை கொடுத்து பணியாற்றி வருகின்றனர்.அனைவருக்கும் சுகப்பிரசவம் ஏற்படவே மகளிர் மருத்துவர்கள் முழு முயற்சி எடுத்து பணியாற்றி வருகின்றனர்.எனவே பிரசவத்தின்போது இரவு பகல் கண்விழித்து மருத்துவ சேவை புரியும் மகளிர் மருத்துவர்கள் மீது, நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, நாமக்கல் மாவட்ட மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் சங்க செயலாளர் மருத்துவர் கவிதா சரவணகுமார், துணைத் தலைவர்கள் மருத்துவர் அழகம்மாள்,மருத்துவர் மல்லிகா குழந்தைவேல், பொருளாளர் மருத்துவர் திருமொழி கண்ணப்பன் உள்ளிட்ட மகளிர் மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.