தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தன்மை காரணமாக, கடந்த சில நாட்களாகவே தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து வந்தது. இதனால் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதிகை நுழைவு வாயில் பகுதியில் இருக்கும் தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் அதன் கிளை அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் பெய்த கடுமையான மழை காரணமாக, அருவிகளில் ஆர்ப்பரித்து நீர் வெளியேறி காற்றாற்று வெள்ளம் ஓடியது. இதனால் கடந்த ஒரு வாரமாகவே அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் மழை அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதியின் வலுப்பெறும் தன்மை காரணமாக மழை குறைந்தது. இதனால் குற்றால அருவிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆனந்தமாக குளித்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.