குறுவைப் பயிர் காப்பீடு தொகை கிடைக்காததை கண்டித்து

விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு

Update: 2025-01-08 13:46 GMT
நாகை மாவட்டத்தில், நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, 2024 -ம் ஆண்டுக்கான இன்சூரன்ஸ் தொகை வரவு வைக்கப்பட்ட போதிலும், பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுவரை இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உரிய பிரிமியம் தொகை கட்டியும் இதுவரை இன்சூரன்ஸ் தொகை வழங்காததை கண்டித்து, விவசாயிகள் வருகிற 10 -ம் தேதி  திருக்குவளை கடை தெருவில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், அதற்கான அமைதி பேச்சுவார்த்தை, திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜேந்திரன்  தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணை பொதுச் செயலாளர்  பிரகாஷ் உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, ஏராளமான விவசாயிகளுக்கு, இன்சூரன்ஸ் தொகை இதுவரை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. அதற்கான காரணத்தை கேட்டும், விடுபட்ட விவசாயிகளின் பெயர் பட்டியலை தரகோரியும் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு  விவசாயிகள் முறையிட்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு கிடைக்காததால், கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்‌. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில், விவசாயிகள் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் ஏ.பி.சுகுமார், ஒன்றிய செயலாளர் ஆர்.பக்கிரிசாமி , விவசாய சங்க நிர்வாகிகள் கே.கோவிந்தராஜன், டி.வெற்றிவேல், எஸ்.கண்ணன், ஏ.பாரூக் அமானுல்லா, ஆர்.ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News