கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு, மாவட்ட ஆட்சியர் தகவல்.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பரமத்தி மற்றும் வேலூர் பேரூராட்சிகளுக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க புதியதாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தகவல்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் முன்னிலையில் பரமத்தி மற்றும் வேலூர் பேரூராட்சிகளுக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்த அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் தேவைகளை அறிந்து அவர்களது அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து வருகிறார்கள். அந்த வகையில் பரமத்தி மற்றும் வேலூர் பேரூராட்சிகளை சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட மாற்று இடம் தேர்வு செய்து வழங்க வேண்டும் எனும் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் இன்றைய தினம் புதிதாக கசடு நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், பரமத்தி மற்றும் வேலூர் பேரூராட்சிகளுக்கான ஒருங்கிணைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் புதியதாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உரிய முன்மொழிவுகள் அரசிற்கு விரைவில் அனுப்பப்படும். எனவே பொதுமக்கள் தங்களது பகுதிகளை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக, பரமத்தி வேலூர் வட்டம், ஓவியம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே பரமத்தி மற்றும் வேலூர் பேரூராட்சிகளுக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் ஆர்.குருராஜன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.