மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 21 பயனாளிகளுக்கு ரூ.5.27 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 135 மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், இராசிபுரம் வட்டத்திற்குட்பட்ட 13 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், கூட்டுறவுத்துறை சார்பில், பொம்மம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 5 விவசாயிகளுக்கு ரூ.5.05 இலட்சம் மதிப்பில் பயிர்க்கடன்களை வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12,300/- மதிப்பில் கார்னர் சீட், ரூ.9,350/- மதிப்பில் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி என மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.5.27 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். முன்னதாக, நாமக்கல் வட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஜோதி அவர்களின் குடிசை வீடு தீ பிடித்து எரிந்து அனைத்து பொருட்களும் சேதமடைந்ததை தொடர்ந்து அவர்களது 8 ஆம் வகுப்பு படிக்கும் மகள் தேன்மொழி, 6-ஆம் படிக்கும் மகள் தீபிகா ஆகியோருக்கு 5 செட் பள்ளி சீருடைகள், 1 செட் புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்தீபன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.