ஜல்லிக்கட்டு, பொங்கல் சுற்றுலா, சென்னை சங்கமம்: பொங்கலையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அரசு ஏற்பாடு

பொங்கலையொட்டி தமிழர்களின் பெருமித அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி, சுற்றுலா துறை சார்பில் பொங்கல் சுற்றுலா, “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2025-01-13 14:26 GMT
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழர்களின் பெருமித அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய 3 இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றது. அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் தமிழ்நாட்டின் பண்பாட்டை வெளிப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டுகளை பிரபலப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்ட நவீன அரங்காக அமைந்துள்ளது. சுற்றுலாத்துறையின் மூலமாக பொங்கல் சுற்றுலா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இயற்கையான சூழலுடன் அமைந்த ஒரு கிராமத்தைத் தெரிவு செய்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை கிராமத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு பாரம்பரிய முறைப்படி அவர்களுக்கு வரவேற்பு அளித்து, அவர்களுடன் ஒன்றுகூடி புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடப்படுகிறது. கிராமிய நடனம், சிலம்பாட்டம், பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்வார்கள். பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, தாயம், அச்சாங்கல், கோ – கோ விளையாட்டு, பம்பரம் விடுதல், கோலி விளையாட்டு போன்ற விளையாட்டுகளும், இசை நாற்காலிப் போட்டி, உறி அடித்தல் போட்டி, கயிறு இழுக்கும் போட்டிகள், வழுக்கு மரம் ஏறும் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. பொங்கலையொட்டி, தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. சென்னையில் இன்று தொடங்கப்படும் இத்திருவிழா, 18 இடங்களில் 14 முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் மாலை 6.00 முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும். இதையொட்டி உணவுத் திருவிழாவும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News