பொங்கல் - வார விடுமுறை காரணமாக
வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொங்கல் தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக, சுற்றுலா தலங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், வார விடுமுறையை முன்னிட்டு, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குவிந்துள்ளனர். சிலுவை பாதையில் மண்டியிட்டு சென்று பழைய மாதா ஆலயத்தில் பிரார்த்தனை செய்தனர். தங்கள் குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தி, நேர்த்திக் கடன் செலுத்தினர். பேராலய வளாகத்தில், மெழுகுவத்தி ஏற்றி, மாதாவுக்கு மாலை அணிவித்து, தென்னங்கன்றுகளை காணிக்கையாக செலுத்தி பிரார்த்தனை செய்தனர். பின்னர், பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியிலும் கலந்துகொண்டனர். பிரார்த்தனை செய்த பக்தர்கள் கடலில் குடும்பத்தினருடன் உற்சாகமாக நீராடினர். மேலும் வாகனங்கள் அணிவகுத்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்கள் போக்குவரத்து நெரிசலை பற்றி கவலைப்படாமல் ஆரோக்கிய மாதாவை வழிபட உற்சாகமாக சென்றனர்