வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள்

வாலாஜாபாத் பேருந்து நிலையம் துவங்கி, மெக்ளின்புரம் பேருந்து நிறுத்தம் வரை, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது

Update: 2025-01-18 10:24 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 20,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வாலாஜாபாத்தை சுற்றி, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், வாலாஜாபாத் வந்து, அங்கிருந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்கின்றனர். இதில், ஒரகடம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் மற்றும் அச்சாலை வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு செல்வோர், வாலாஜாபாத் ரயில்வே பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். வாலாஜாபாத் ரயில்வே பாலம் அருகே, காவல் நிலையம், சார் - பதிவாளர்,தாசில்தார், வட்டார வளர்ச்சி உள்ளிட்ட அரசு அலுவலகங்களும், ரயில் நிலையமும் உள்ளன. இதனால், அப்பகுதி எப்போதும் அதிக மக்கள் நடமாட்டத்தோடு காணப்படும். வாலாஜாபாத் ரயில்வே பாலம் வழியாக, காலை மற்றும் மாலை நேரங்களில், சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்லும் பேருந்துகள், லோடு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. அதுமட்டுமின்றி, பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் பேருந்துகள், அலுவலகங்களுக்கு செல்வோர் என, ஒரே நேரத்தில் நுாற்றுகணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அந்நேரங்களில், வாலாஜாபாத் பேருந்து நிலையம் துவங்கி, மெக்ளின்புரம் பேருந்து நிறுத்தம் வரை, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது, ரயில்வே பாலம் வழி சாலையை விரைந்து கடக்க முடியாமல், தினமும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகளில் சிக்குகின்றனர்.

Similar News