கடலோரத்தில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்
கடலோரத்தில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்
சென்னை சுற்றுவட்டார கடற்கரை பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. இது வன ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அழுகிய நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகளால், சுற்றுச்சூழல் சீர்கேடும் அடைந்து வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் மாமல்லபுரம் சுற்றுவட்டார கடலோர மீனவர் கிராமங்களான நெம்மேலி, தேவநேரி, பட்டிபுலம், வெண்புருஷம், கொக்கிலமேடு உள்ளிட்ட கடலோரத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆமைகள் ஆங்காங்கே செத்து கரை ஒதுங்கி கிடக்கிறது. இதை அப்பகுதி மீனவர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- கிழக்கு கடற்கரை சாலை கடலோர பகுதியில், அதிகளவில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதாக தகவல்கள் வந்துள்ளது. இது குறித்து அரசுக்கு தெரிவித்துள்ளோம். கடற்கரை பகுதிகளுக்கு முட்டையிட வரும் ஆமைகளுக்கு இயற்கை சூழலில் நெருக்கடி ஏற்படுவதால், அது தன் போக்கை மாற்றி மாற்று இடங்களுக்கு செல்லும் போது, கனவா வலைகள் (டிரால் நெட்) வலைகளில் அடிபட்டு மூச்சுவிட முடியாமல் இறந்தும் கரை ஒதுங்குவதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். வரும் 22-ந் தேதி மீன்வளத்துறை சார்பில், இது தொடர்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இறந்து கரை ஒதுங்கிய ஆமைகளை, வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் கடற்கரை பகுதிகளில் புதைத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.