சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி
இளைஞர் இறந்தார்- முதியவர் சிகிச்சை;

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த மடப்புரம் முதலியார் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள்.விவசாயி. இவரது மகன் கவியரசன் (21). இவர் கடந்த 21 -ந்தேதி வீட்டிலிருந்து திருக்குவளை செல்லும் சாலையில் மேலப்பிடாகை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மேலப்பிடாகையில் இருந்து, களத்திடல்கரை கீழத்தெருவை சேர்ந்த பக்தவச்சலம் (60) என்பவர் சென்ற சைக்கிளின் மீது கவியரசன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேராக மோதியது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு, நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக 2 பேரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், நேற்று கவியரசன் சிகிச்சை பலனின்றி இறந்தார். பக்தவச்சலம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, திருக்குவளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.