காந்தி மண்டப நிகழ்வுகள் குறித்த என் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிராகரித்தார் - ஆளுநர் ரவி ஆதங்கம்
தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தும் நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்த முதல்வர் ஸ்டாலினிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பை சந்தித்தன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார்.;

இது தொடர்பாக அவர் ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956-ம் ஆண்டு காமராஜரால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச் சின்னமாகும். காந்தி நினைவு நிகழ்வுகளை, அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை, நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா? தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதல்வரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பை சந்தித்தன. காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? என்று கூறியுள்ளார்.