குடிநீர் பைப் அமைத்து ஆறு மாதம் ஆகியும் தண்ணீர் இல்லை புகார் மனு
மத்தளமுடையான் கிராமத்தில் ரூபாய் 3.80 லட்சத்தில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டும் ஆறு மாதமாக குடிநீர் வராமல் காற்றுதான் வருவதாக குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் பிடித்து தலையில் சுமந்து வருவதாக வேதனை. நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள்;
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சீர்காழி தாலுகா பச்சைபெருமாள்நல்லூர் ஊராட்சி மத்தளமுடையான் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாததால் இரண்டு கிலோமீட்டர் தூரம் குடிநீரை தலையில் சுமந்து வருவதாகவும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் மனு அளித்தனர். கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மத்தளமுடையான் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடால் இரண்டு வருடமாக தவித்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையையடுத்து 15-வது மத்திய நிதிக்குழு மானியம் 2024-2025ல் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 36 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பைப் லைன் விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் முடிவடைந்து ஆறு மாதமாகிறது. இதுவரை குடிநீர் வழங்கவில்லை. குடிநீர் குழாய்களில் குடிநீர் வராமல் காற்று தான் வருவதாகவும், இதனால் தினந்தோறும் 2 கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் பிடித்து குடத்தை தலையில் சுமந்து குடிநீரை வீட்டுக்கு கொண்டு செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் முதல் பல துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஆதலால் இன்று மாவட்ட ஆட்சியர் மக்கள் குறை தீர் கூட்டத்தில் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் மனு அளித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.