சேலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது
போலீசார் நடவடிக்கை;
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் பழிக்கு பலியாக நடக்கும் கொலை சம்பவத்தையடுத்து இப்பகுதியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். உதவி கமிஷனர் பரவாசுதேவன், முரளி, ஹரிசங்கரி ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் தேவையில்லாமல் ஏராளமானோர் டீ குடிப்பதாக கூறி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு டூவீலரில் செல்கின்றனர். அந்த நேரத்தில் அவர்கள் அங்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்றாலும் ஒரு டூவீலரில் மூன்று பேராக சென்று வருகின்றனர். இவர்களில் சிலர் வழிப்பறி ஆசாமிகளாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இரவு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று கிச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அந்த நேரத்தில் வாலிபர் ஒருவரை வழிமறித்து பணம் பறித்து தப்பி சென்ற 4 பேரை மடக்கிப்பிடித்தனர். இவர்கள் கொலை செய்யப்பட்ட ரவுடி செல்லதுரையின் கோஷ்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதில் ஏற்கனவே கொலை முயற்சி வழக்குள்ள விக்ரம் (எ) குஜாலி, கார்த்தி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.