கோர விபத்தில் இளம் பெண் பலியான சோகம் நாமக்கல்லில் பரபரப்பு.
கர்நாடகாவில் இருந்து கரூருக்கு டிரெய்லர் லாரியில் ஸ்டீல் பிளேட் ஏற்றிக்கொண்டு நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் வரதராஜ் சென்று கொண்டிருந்தார்.;
அப்போது நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வள்ளிபுரம் அருகே உள்ள சாலையில் டிரெய்லர் லாரி செல்லும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்பின் சுவரில் டயர் உரசியதில் திடீரென டயர் வெடித்தன. இதனையடுத்து சாலையின் முன்னே சென்று கொண்டிருந்த எல்.பி.ஜி டேங்கர் லாரி மீது மோதி விட்டு டிரெய்லர் லாரி தலைக்குப்பறாக கவிழ்ந்தது, அப்போது சாலையில் டூவிலரில் சென்று கொண்டிருந்த தாய் சுதா ( வயது 45), மகள் சினேகா ( வயது 24) ஆகிய இருவர் மீதும் டிரெய்லர் லாரி மோதியதில் படுகாயமடைந்த இளம் பெண் சினேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த சுதா, டிரெய்லர் லாரி ஓட்டுநர் வரதராஜ் ஆகிய இருவரையும் அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் டிரெய்லர் லாரியில் ஏற்றி வந்த ஸ்டீல் பிளேட் அனைத்தும் சாலையில் சிதறி கிடந்தன, ஒரு சில ஸ்டீல் பிளேட்கள் சாலையின் அருகே இருந்த வாகன பேட்டரி சர்வீஸ் செய்யும் கடைக்குள்ளே புகுந்தன. கடையில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன. இந்த சாலை விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்து நெரிசலை சரிசெய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.