சேத்துப்பட்டில் மதுபாட்டில்களை கடத்தியதாக ஒருவர் கைது.
ஆரணி, சேத்துப்பட்டில் மதுபாட்டில்களை கடத்தியதாக வாலிபரை சேத்துப்பட்டு போலீஸார் கைது செய்தனர்;
ஆரணி, சேத்துப்பட்டில் மதுபாட்டில்களை கடத்தியதாக வாலிபரை சேத்துப்பட்டு போலீஸார் கைது செய்தனர். சேத்துப்பட்டு பழம்பேட்டை தர்மராஜா கோயில் அருகே வாலிபர் ஒருவர் கள்ளத்தனமாக மது பாட்டில்களை இருசக்கரவாகனத்தில் கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சேத்துப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரது இருசக்கர வாகனத்தை சோதனையிட்டனர். அதில், கள்ளத்தனமாக விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்ட 60 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் நெடுங்குணம் கிராமத்தை சேர்ந்த பலராமன் மகன் பார்த்திபன் (45) என்பது தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 60 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பார்த்திபனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.