சேலத்தில் புதுப்பிக்கப்பட்ட காந்தி சிலை திறப்பு விழா
முன்னாள் அமைச்சர் தங்கபாலு பங்கேற்பு;
சேலம் அன்னதானப்பட்டியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்து தற்போது புதுப்பிக்கப்பட்ட காந்தி சிலை திறப்பு விழா மற்றும் தூய்மை பணியாளர்கள், பள்ளி மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கே.வி.தங்கபாலு கலந்து கொண்டு காந்தி சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கி பேசினார். அப்போது கே.வி.தங்கபாலு பேசுகையில், மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கும். ஆட்சியில் இல்லாதபோது மக்கள் துயரப்படுகிறார்கள். அதற்கு இன்று நடக்கும் பா.ஜனதா கட்சியின் ஆட்சியே சாட்சி. இந்த பா.ஜனதா ஆட்சியில் மக்கள் துன்பப்படுகிறார்கள். காந்தியும், காமராஜரும் இந்த நாட்டு மக்களுக்கு நிறைய நல்லது செய்துள்ளனர். இதனை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சி பெறும். ராகுல்காந்தியை பிரதமராக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும், என்றார்.