எருமப்பட்டி ஒன்றியத்தில் ரூ.16 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்! -கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி தொடங்கி வைத்தார்.
சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தும், அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறந்து வைத்தும் அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு பொதுமக்கள் மத்தியில் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி பேசினார்.;
எருமப்பட்டி ஒன்றியத்தில் ரூ.16 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி தொடங்கி வைத்தார். எருமப்பட்டி ஒன்றியம் பெருமாபட்டி ஊராட்சி துறையூர் சாலையில் இருந்து கரட்டுப்பட்டி வரை ரூ.5.35 கோடியில் தார் சாலை மேம்பாடு செய்தல், போடிநாயக்கன்பட்டி ஊராட்சி மண் கரடு பகுதியில் ரூ.1.31 கோடியில் சமுதாயக்கூடம் கட்டுதல், அலங்காநத்தம் ஊராட்சியில் ரூ.17. 25 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறப்பு விழா, புதுக்கோட்டை ஊராட்சியில் ரூ.17. 25 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா, பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் ரூ.5.75 கோடியில் கெஜக்கோம்பை மற்றும் கன்னிமார் கோயில் வரை தார் சாலை மேம்பாடு செய்தல், ரூ.17.25 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா, பொன்னேரி பகுதியில் ரூ.9 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல், வரகூர் ஊராட்சியில் ரூ.1.31 கோடியில் சமுதாயக்கூடம் கட்டுதல், காவக்காரன்பட்டி ஊராட்சியில் ரூ.25 லட்சத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்தல் என ரூ.16 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார அட்மா குழு தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், மேகலா முன்னிலை வகித்தனர்.விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து, அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறந்து வைத்து அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில்... எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றி கொடுக்கப்பட்டு வருகிறது. விடுபட்ட மகளிர்களுக்கு உரிமை தொகை வருகின்ற 12ம் தேதி வழங்கப்படும். எருமப்பட்டி ஒன்றியத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. ஊராட்சி முழுவதும் மண் சாலைகள் அனைத்தும் தார் சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. என்றார்.நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விமலா சிவகுமார், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் விமல்,மகாமுனி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாலகிருஷ்ணன், நேரு, துளசிராமன், ஊராட்சி செயலாளர்கள் மூர்த்தி, வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.