நாமக்கல்லில் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் – 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
சிலம்பம் தமிழரின் பாரம்பரிய போர்க்கலை மட்டுமல்ல உடல் வலிமை, ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் பண்பாட்டை வளர்க்கும் உயரிய கலை. இளம் தலைமுறையினரிடம் சிலம்பக் கலையை மீண்டும் கொண்டு செல்லும் நோக்கத்துடன் இப்போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.;
நாமக்கல் சிலம்பம் அடிமுறை கலைக்கூடம் சங்கம் சார்பில், யூனிடேடு ரிலீஜியஸ் இனிசியேடிவ் (URI), பந்தம் பவுண்டேஷன்,நாமக்கல் மற்றும் பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல்லில் வெற்றிகரமாக நடைபெற்றன.நாமக்கல்–திருச்சி சாலையில் அமைந்துள்ள தி ஸ்பெக்ட்ரம் அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில், தமிழகம் முழுவதும் இருந்து வந்த 800க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.ஸ்பெக்ட்ரம் பள்ளி தாளாளர் விக்னேஷ் மயில்சாமி போட்டிகளை தொடங்கி வைத்தார். ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு மற்றும் சுருள் வாள் ஆகிய பிரிவுகளில் தங்களது சிலம்பத் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். 5 வயது முதல் 21 வயது வரை வயது அடிப்படையில் அமைக்கப்பட்ட தனித்தனி பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், மாணவ, மாணவியர்களின் வேகமான அசைவுகள், துல்லியமான சுழற்சிகள் மற்றும் பாரம்பரிய சிலம்பக் கலையின் அழகிய வெளிப்பாடுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. போட்டிகளை காண பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, வீரர், வீராங்கனைகளுக்கு தொடர்ந்து உற்சாகம் அளித்தனர். போட்டி முடிவில் சிறப்பாக விளையாடிய வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், பசுமை தில்லை சிவக்குமார், அலையன்ஸ் கிளப் துணைத் தலைவர் இன்ஜீனியர் மணி, மக்களோடு நாம் இயக்க தலைவர் சமியுல்லா, நாமக்கல். மாவட்ட சிலம்ப ஆசான்கள் சங்க துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள், மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.இதுகுறித்து நாமக்கல் சிலம்பம் அடிமுறை கலைக்கூடம் சங்கத்தின் தலைவர் மாரிமுத்து மற்றும் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது... “சிலம்பம் தமிழரின் பாரம்பரிய போர்க்கலை மட்டுமல்ல; உடல் வலிமை, ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் பண்பாட்டை வளர்க்கும் உயரிய கலை. இளம் தலைமுறையினரிடம் சிலம்பக் கலையை மீண்டும் கொண்டு செல்லும் நோக்கத்துடன் இப்போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர்களின் ஆர்வமும் திறமையும் எதிர்காலத்தில் சிலம்பத்திற்கு புதிய உயரத்தை தரும்”இந்நிகழ்ச்சியின் மூலம் இளைய தலைமுறையினரிடம் தமிழர் பாரம்பரியமான சிலம்பக் கலைக்கு மீண்டும் புத்துயிர் கிடைத்துள்ளது என தெரிவித்தனர்.