விடுமுறை தினத்தில் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
படகு சவாரி செய்து உற்சாகம்;
ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வார இறுதி நாளான நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் ஏற்காட்டிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அங்கு நிலவி உள்ள கடும் பனிமூட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்காடு பகுதியில் நிலவிய பனிமூட்டத்தால் ஏற்காடு ஏரி பனி படலமாக காட்சியளித்தது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிவிட்டபடியே சென்றனர். ஏற்காட்டில் சுற்றுலா பயணி வருகை அதிகரித்ததால் பெரும்பாலான தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன. மேலும் மதிய நேரங்களில் உணவகங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் சேர்வராயன் கோவில், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட் போன்ற பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு சென்று ஏற்காட்டின் அழகை ரசித்து சென்றனர். சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.