விடுமுறை தினமான நேற்று பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
விசைபடகில் சென்று உற்சாகம்;
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. கடல்போல் பறந்து விரிந்திருக்கும் இந்த நீர்த்தேக்க பகுதியானது, சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையால் இதமான, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவிவருவதால் பூலாம்பட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் பூலாம்பட்டி கதவணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள அணைப்பாலம், நீர் மின் உற்பத்தி நிலையம், நீர் வெளியேற்றும் பிரதான மதகுகள் மற்றும் கரையோர இயற்கை அழகினை கண்டு ரசித்தனர். இதனை தொடர்ந்து அணை பகுதியில் விசை படகில் சவாரி செய்து உற்சாகமாக பொழுதை கழித்தனர்.