பனமரத்துப்பட்டி ஏரிக்கு மேட்டூர் உபரிநீரை கொண்டு வரக் கேட்டு
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்;
மேட்டூர் உபரிநீரை சிறப்பு கால்வாய் மூலம் பனமரத்துப்பட்டி ஏரிக்கு கொண்டு வரக்கோரி கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கம் சார்பில் பனமரத்துப்பட்டி சந்தைபேட்டை அருகில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் சுகுமார், ஜெயபால், தங்கபாலு ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், மேட்டூர் உபரி நீரை பனமரத்துப்பட்டி ஏரிக்கு சிறப்பு கால்வாய் மூலம் கொண்டு வர வேண்டும், பனமரத்துப்பட்டி ஏரியின் முன்பகுதியை சுற்றுலாதலமாக அமைத்து கொடுக்க வேண்டும், பனமரத்துப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்படும் அரளி பூக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் குளிர்பதன அறைகளை கொண்ட சேமிப்பு கிடங்கு ஏற்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பனமரத்துப்பட்டி ஏரிக்கு மேட்டூர் உபரிநீரை கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. மேட்டூரில் அணையில் இருந்து கடலில் வீணாக கலக்கும் உபரிநீரை பனமரத்துப்பட்டி ஏரிக்கு திருப்பி விடலாம். இதனால் பனமரத்துப்பட்டி சுற்றுவட்டார மக்கள் பயன்பெறுவார்கள். இதுதவிர, குடிநீர் தேவைக்கும் பயன்படும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே, இந்த திட்டத்தை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.