முதல்-அமைச்சர் விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்

கலெக்டர் பிருந்தா தேவி தகவல்;

Update: 2025-07-22 03:34 GMT
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள் (2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள்) 2 சிறந்த பயிற்றுனர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது, தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, விளையாட்டு போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துனர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்), ஒரு ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10,000-க்கு மிகாமல் ஒரு தங்கப்பதக்கமும், ஒரு பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி, 2024-2025 மற்றும் 2025-2026 ஆகிய 2 ஆண்டுகளுக்கான முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் http://www.sdat.tn.gov.in என்ற இணையத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் "முதல் அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்" என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 11-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News