மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இருந்து இளையராஜா பெயர் நீக்கம் - ஐகோர்ட்டில் வனிதா தகவல்

நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பெயரை நீக்கிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-07-23 15:32 GMT
நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குனர் ராபர்ட் நடிப்பில் உருவான ‘மிசஸ் & மிஸ்டர்’ திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ராத்திரி சிவ ராத்திரி...’ பாடல் இடம்பெற்றுள்ளது. தான் இசையமைத்த பாடலை தன்னுடைய அனுமதியில்லாமல் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும், பாடலை மாற்றி அமைத்துள்ளதாகவும் இளைராஜா தரப்பில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது காப்புரிமை மீறிய செயல் என்றும் உடனடியாக அந்தப் பாடலை திரைப்படத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் இளையராஜா மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது இளையராஜா இசையமைத்த பாடலை பயன்படுத்துவதோடு அவரின் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார் சார்பில் எக்கோ நிறுவனத்திடம் அனுமதி பெற்று தான் அந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதால் காப்புரிமை மீறல் இல்லை எனக் குறிப்பிட்டார். இதனையடுத்து, மனு குறித்து தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன், படத்தில் இளையராஜா பெயரை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அப்போது வனிதா விஜயகுமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீதர், இளையராஜாவின் 4850 பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், அவர்களிடமிருந்து பாடலை வாங்கியதாகவும் தெரிவித்தார். மேலும் படத்தில் இளையராஜாவின் பெயர் பயன்படுத்தப்பட்டதை நீக்கிவிட்டதாக குறிப்பிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்து நீதிபதி இந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தையும் சேர்க்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 18ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Similar News