விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் மயக்க மருந்தியல் சர்வதேச கருத்தரங்கு
மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது;
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் மயக்க மருந்தியல் பிரிவின் மூலம் சர்வதேச அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்து கல்லூரியின் செயல்பாடுகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார். மயக்க மருந்துகள் பிரிவின் பொறுப்பாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார். இதில், பல்கலைக்கழக பதிவாளர் நாகப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஓமன் நாட்டின் மஸ்கட் பல்கலைக்கழக மருத்துவ நகரத்தின் சுல்தான் கபூஸ் புற்றுநோய் பராமரிப்பு மையத்தின் மருந்தியல் பிரிவு ஆலோசகர் வர்கீஸ், டெல்லி போத்திஸ் நினைவு ஆராய்ச்சி மருத்துவமனை மூத்த ஆலோசகர் குஞ்சன் சர்மா, திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் கிருபாகர், லண்டன் ராயல் தேசிய எழும்பியல் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு மயக்க மருந்து நிபுணர் டாக்டர் ராம் பிரபுகிருஷ்ணன், கத்தார் நசிம் சுகாதார பிரிவின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று மயக்க மருந்து பிரிவின் தலைமை மயக்க மருந்து தொழில்நுட்பவியலாளர் மகேஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசினர். கருத்தரங்கில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், தொழில்நுட்பவியலாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 2-வது நாளாக நடந்த கருத்தரங்கில் மாணவர்களுக்கு மயக்க மருந்தியல் பிரிவின் தொழில் நுட்பம் சார்ந்த செய்முறை விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், மதுரை ஏ.ஆர்.எஸ். மருத்துவ அமைப்பின் சேவை பொறியாளர் மணிகண்டன், யுவராஜ், நாமக்கல் ரூபன்ராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.