அயோத்தியாப்பட்டணம் அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் இறந்தார்.

போலீசார் விசாரணை;

Update: 2025-07-28 09:21 GMT
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள கோலத்துகோம்பை பகுதியை சேர்ந்தவர் செல்வம். விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் மிதந்தது. இதுகுறித்து காரிப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மற்றும் வாழப்பாடி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் இருந்து வாலிபரின் உடலை மீட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வம் மகன் தினகரசு (வயது20) என்பது தெரிந்தது. இவர் கோலத்துகோம்பை பகுதியில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் தங்கி பெற்றோருடன் வேலை செய்ததும் தெரியவந்தது. இவர் மனநிலை பாதிக்கப்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும், நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்ற அவர் அந்த பகுதியில் நடந்து சென்றபோது தவறி கிணற்றில் விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், தினகரசுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் வாலிபர் பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News