புதிய பள்ளி கட்டிடம் கட்டி தரக்கோரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
ஏற்காட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு;
ஏற்காடு அருகே வேலூர் ஊராட்சிக்குட்பட்ட நடூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பட்டிப்பாடி, கொண்டையனூர், அக்கறையூர், சொனப்பாடி, வேலூர் ஆகிய கிராமங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் புதிதாக பள்ளி கட்டிடம் தரக்கோரி பலமுறை கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்தப்பள்ளி கட்டிடம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ளதால் இங்கு பள்ளி கட்டிடம் கட்ட அனுமதிக்க மாட்டோம் என சிலர் கூறுகின்றனர் எனவும், இந்த பள்ளியில் போதிய இட வசதி இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நடூர் கிராமத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் அடிப்படை வசதிகளுடன் புதிதாக பள்ளி கட்டிடம் அமைத்துக்கொடுக்க வேண்டும் எனக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் திடீரென ஏற்காடு-வேலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.